தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு தங்க நகை வழங்கும் அறிவிப்பு மற்றும் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் என்பதையே பலரும் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். திருமணம் ஆகும் பெண்களுக்கு 8 கிராம் (1 பவுன்) தங்கம் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு குறித்து சந்தேகம் எழுப்பிய அவர், தற்போதைய தங்க விலை நிலவரத்தில் இதற்கான நிதி எங்கிருந்து வரும் என்பது முக்கியமான கேள்வி என தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உயர்வு, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற வாக்குறுதிகள் அனைத்தும் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இவை நீண்டகால திட்டங்கள் அல்ல, ஆட்சிக்கு வந்த உடனே நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் என்பதால் நடைமுறை சவால்கள் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், நிர்வாக ரீதியான சிக்கல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியல் அமைப்பு உருவாகும் போது அனுபவமிக்க அதிகாரிகள், நிர்வாக அமைப்பு, துறை சார்ந்த ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கியமானவை. ஆனால் புதிய கட்சி ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளுடன் பணியாற்றுவதில் சவால்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்திருப்பதால், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் த.வெ.க செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மொத்தத்தில், விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் சமூக ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், அதன் நடைமுறை சாத்தியத்தன்மை குறித்து அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் தீவிர விவாதம் உருவாகியுள்ளது.
Read more: “அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்..” கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..!



