வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த தயிர் ஒரு சிறந்த சரிவிகித சத்துணவாகக் கருதப்படுகிறது. பெரும்பாலானோர் இதனை மதிய வேளையிலும், சிலர் காலையிலும் விரும்பி உண்கின்றனர். இருப்பினும், “இரவு நேரங்களில் தயிர் சாப்பிடலாமா, அது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துமா?” என்ற சந்தேகம் பலரிடமும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் சுசேதா பதக் கூறுகையில், முடிந்தவரை இரவு வேளையில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே உடலுக்கு நல்லது என்கிறார். தயிரில் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அதிகளவில் இருப்பதால், இரவு வேளையில் உடலின் இயக்கம் குறையும்போது இதனை முழுமையாக செரிமானம் செய்வது உடலுக்குக் கடினமாகலாம். குறிப்பாக ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இரவில் தயிர் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அவர் எச்சரிக்கிறார்.
இரவு உணவில் பால் பொருட்களை சேர்க்க விரும்பினால், தயிருக்கு பதிலாக எளிதில் செரிமானமாகக்கூடிய நீர்த்த மோர், ராய்தா அல்லது மோர் குழம்பு போன்றவற்றை மிதமாக உட்கொள்ளலாம். மேலும், தவிர்க்க முடியாத சூழலில் இரவில் தயிர் சாப்பிடுவதாக இருந்தால், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தயிரையோ அல்லது அளவுக்கு அதிகமாகப் புளித்த தயிரையோ சாப்பிடக் கூடாது. வீட்டிலேயே புதிதாகத் தோய்க்கப்பட்ட தயிரை, உடல் தன்மைக்கு ஒத்துவந்தால் மட்டுமே இரவில் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும் என உணவியல் நிபுணர் அறிவுறுத்துகிறார்.
Read More : குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும்! உணவுத்துறை அறிவிப்பு!



