விவசாயிகளை ஏமாற்ற திமுக அரசு முயல்கிறதோ..? என்ற ஐயம்… அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு…!

anbumani 2025

மழையில் நனைந்து சேதமடைந்த 2 லட்சம் ஏக்கர் நெல் பயிர்களுக்கு இழப்பீடு எங்கே..? என் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட பயிர்களின் அளவு குறித்து அரசு முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதால், விவசாயிகளை ஏமாற்ற திமுக அரசு முயல்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன.அதை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அக்டோபர் 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். அதே நாளில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர், பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால், அதன்பின் 35 நாள்களாகியும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களில் விளைச்சல் பாதிக்கும் கீழ் குறைந்து விட்டது. அதேபோல், சம்பா மற்றும் தாளடி பயிர்களை ஒரு லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் மறு நடவு செய்ய நேரிட்டது. அதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதை ஈடு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், அந்த கடமையை செய்ய திமுக அரசு தவறுகிறது.பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லி அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. மழை பாதிப்புகளை கணக்கிட 35 நாள்கள் என்பது மிக அதிக காலம் ஆகும்.

தமிழக அரசிடம் உள்ள தொழில்நுட்பம், மனிதவளம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது இக்கணக்கெடுப்பை எப்போதோ நடத்தி முடித்திருக்க முடியும். ஆனால், பயிர்களுக்கான இழப்பீடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன் பின்னணியில் விவசாயிகளுக்கு எதிரான சதி இருப்பதாகவே தோன்றுகிறது. அக்டோபர் மாதம் பெய்த மழையில் இரு லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக விவசாய அமைப்புகள் கூறியுள்ளன. அக்டோபர் 22-ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர், 16 ஆயிரம் ஹெக்டேர், அதாவது 40 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழையில் மூழ்கி விட்டதாக தெரிவித்திருந்தார்.அதன்பின் சில நாள்கள் கழித்து அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட செய்தியில் 14 ஆயிரம் ஹெக்டேர், அதாவது 35 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படியாக முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்து, ஒரு கட்டத்தில் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற நாடகத்தை அரங்கேற்ற திமுக அரசு திட்டமிட்டிருக்கிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. விவசாயிகளுக்கு துரோகம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்ட திமுக அரசு, அவர்களை ஏமாற்ற எந்த எல்லைக்கும் செல்லக்கூடும். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான எடுத்துக் காட்டுகள் உள்ளன.காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன.

ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தனர். அந்த இழப்பீட்டைக் கூட தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை.விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவே திமுக அரசு அவதாரம் எடுத்து வந்திருப்பதாக ஆட்சியாளர்கள் அவர்களாகவே போலி புகழுரைகளை சூடிக் கொள்வார்கள். ஆனால், விவசாயிகள் நலனுக்காக துரும்பைக் கூட அசைக்க மாட்டார்கள்.

காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், விவசாயிகள் கடனாளிகளாக மாறி விடுவார்கள். கடன் தான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது. மழையில் நனைந்து சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்காததன் மூலம் விவசாயிகளை திமுக அரசே கடன் வலையில் வீழ்த்தி விடக் கூடாது. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மருத்துவ படிப்புக்கு ரூ.29 லட்சம் வரை கட்டண நிர்ணயம்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Wed Nov 26 , 2025
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.29 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகள், பட்டயப்படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கல்விக் கட்டணமாகவும், ரூ.10 ஆயிரம் சிறப்பு கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கு […]
Tn Govt 2025

You May Like