சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளராக வடிவேல் இராவணன் மற்றும் பொருளாளராக திலகபாமா ஆகியோர் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் தமிழக நலன் மற்றும் கட்சி வளர்ச்சி சார்ந்த மொத்தம் 31 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், மருத்துவர் ஐயாவின் கொள்கைகளை வென்றெடுத்து 2031-ஆம் ஆண்டில் பாமக ஆட்சியை அமைப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான நன்றிக்கடன் என குறிப்பிட்டார். அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முதல் சௌமியா அன்புமணி தலைமையில் தமிழ்நாடு முழுவதும் 2 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக மதுவிலக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
அத்துடன், பாமகவை மாநில எல்லைகளைத் தாண்டி விரிவுபடுத்தும் நோக்கில், விரைவில் ஆந்திர மாநிலத்திலும் கட்சிக் கிளையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதுகுறித்து வரும் சனிக்கிழமையன்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தனது ‘ஈகோ’வை விட்டுவிட்டு, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார். வரவிருக்கும் கடுமையான வறட்சியை கருத்தில் கொண்டு, ரூ.15,000 கோடி மதிப்பிலான விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இறுதியாக, பாமக நிர்வாகிகள் வெறும் சமூக வலைதளங்களில் மட்டும் இயங்காமல், கிராமப்புறங்களில் நேரடியாகக் களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராட வேண்டும் என அன்புமணி கூறினார்.
Read More : செம குட் நியூஸ்..!! இனி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி..!! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி..!!



