நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார்.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் குடியரசு தினத்தைப் போன்றே சுதந்திர தினத்திலும் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களுக்கே அந்த உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி 1974-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி புதிய வரலாற்று மரபைத் தொடங்கி வைத்தார். அன்று முதல் சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் நடைமுறை தொடர்ந்து வருகிறது.
அந்த வரலாற்று மரபின் தொடர்ச்சியாக, இன்று காலை புனித ஜார்ஜ் கோட்டைக்கு வருகை தரும் முதலமைச்சர் விஜய், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில், தமிழ் மொழி மற்றும் தமிழின வளர்ச்சிக்குப் பங்காற்றிய பெருமக்களைப் போற்றும் ‘தகைசால் தமிழர் விருது’ மற்றும் அதற்கான 10 லட்சம் ரூபாய் காசோலையை முதலமைச்சர் வழங்கி கவுரவிக்கிறார். மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது, துணிச்சல் மற்றும் சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட முக்கிய விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
இவற்றுடன் முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சமூகப் பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருதுகள், முன்மாதிரியாகச் செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் மற்றும் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகளையும் முதலமைச்சர் விஜய் வெற்றியாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
Read More : “மானே.. தேனே.. பொன்மானே”..!! எதுக்கு இந்த இரட்டை வேடம்..? தவெக அரசை விளாசிய உதயநிதி..!!



