சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர், பிரபல தொழில் அதிபரான மணி. இவருக்கு 47 வயது இருக்கும். இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலின் மதுபானக்கூடத்தில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு தீபிகா என்ற தீபலக்ஷ்மியும் மது அருந்த வந்துள்ளார். இவர் மணிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான தோழி ஆவார். பின்னர் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு அந்த ஓட்டலிலேயே அறையெடுத்து தங்கி இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் போதை மயக்கத்தில் மணி தூங்கிஉள்ளார்.
அடுத்த நாளான 28ஆம் தேதி காலை, போதை தெளிந்ததும் மணி எழுந்துள்ளார். அப்போது அந்த அறையில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவரது தோழியான தீபிகாவும் அங்கு இல்லை. பின்னர் தனது கழுத்தை பார்த்தபோது அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியையும் காணவில்லை.
பின்னர் இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 10 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதற்கும் தீபிகாவிற்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தையும் காவலரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீபிகாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் தீபிகாவின் பல காதல் விளையாட்டுகளும் ஓட்டல் ஓட்டலாக சென்று அவர் செய்த லீலைகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏற்கனவே திருமணமான தீபிகாவுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது தவறான நடவடிக்கை காரணமாக கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து பல ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகி வந்த தீபிகா மது குடித்துவிட்டு உல்லாசம் அனுபவித்துவிட்டு ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் மாம்பழத்தை சேர்ந்த கார் டிரைவர் சதீஷ்குமார் (24) என்பவருடன் தீபிகாவுக்கு காதல் ஏற்பட்டு ஒன்றாக வசித்து வந்துள்ளார். மேலும் அவ்வப்போது ஆண் நண்பர்களுடன் சென்று மது அருந்திவிட்டு உல்லாசம் அனுபவித்துவிட்டு, அவர்கள் அசந்த நேரம் பார்த்து அவரது உடைமைகள் மற்றும் நகைகளை, காதலன் சதீஷ்குமாருடன் சேர்ந்து திருடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் தான் கடந்த 27 ஆம் தேதி தொழிலதிபர் மணியுடன் மது அருந்திவிட்டு ஓட்டல் அறையில் உல்லாசமாக இருந்துள்ளார். மணி உறங்கியதும், தனது காதலனான சதிஷ் குமாரை ஓட்டலுக்கு வரவழைத்து மணியின் கழுத்திலிருந்த 10 பவுன் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
பின்னர் திருடிய நகையை ரூ.7 லட்சத்துக்கு விற்றுள்ளனர். நகையை விற்ற பணத்தில் காதலன் சதீஷ்குமாருக்கு KTM மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் ஏற்காட்டிற்கு இன்பசுற்றுலாவும் சென்றுள்ளனர். இவர்களை கைது செய்த போலீசார் ரூ.3 லட்சம் பணத்தையும் KTM மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர். தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லியே ஒவ்வொரு ஆணிடமும் தீபிகா பழகிவந்துள்ளார், என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் மணியிடம் இருந்து திருடிய நகையை மகேஷ் என்பவருக்கு விற்றுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அந்த நகையை உருக்கிவிட்டதாக தீபிகா போலீசாரிடம் தவறான தகவலையம் கூறியுள்ளார். ஆனால் போலீசார் மகேஷை பிடித்து விசாரித்ததில் அவர் நகையை உருக்காமல் அப்படியே வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மணியிடம் திருடிய நகையையும் காவலர்கள் மீட்டுள்ளனர். தீபிகாவின் வலையில் விழுந்து ஏமாந்த பலரும் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்து, அவர் மீது புகார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.