அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன் தெரிவித்த ரூ.30,000 கோடி குற்றச்சாட்டு குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் மதுரை மத்திய & தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி; “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன்பு முதல்வரின் மருமகன் சபரீசனும், துணை முதல்வர் உதயநிதியும் ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்துள்ளனர். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக கூறினார். இது குறித்து இப்போது வரை முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்திருப்பதாக அமைச்சர் ஒருவரே கூறியுள்ளார். இதில் உண்மையில்லாமல் இருக்காது. இது குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்படும். முறைகேடாக பணம் சேர்த்தது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக சாதி, மதத்துக்கு அப்பாற்றப்பட்ட கட்சி. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. சாதி, மதச் சண்டை இல்லாமல் பார்த்துக் கொண்டோம். இருப்பினும் அதிமுக – பாஜக கூட்டணி சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்ற தோற்றத்தை வேண்டும் என்றே திட்டமிட்டுப் பரப்புகின்றனர். உண்மையில் சிறுபான்மையினருக்கு முழுமையாக பாதுகாப்பு கொடுப்பது அதிமுகதான். இதனால் திமுகவின் அவப்பிரச்சாரத்தை சிறுபான்மை மக்கள் நம்பக்கூடாது.
சமூக நீதியைப் பாதுகாப்பதாக திமுக கூறுகிறது. திண்டிவனத்தில் பட்டியலின அதிகாரியை திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர். பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அரசாக திமுக அரசு உள்ளது. இவர்களா சமூக நீதியைப் பாதுகாக்க போகிறார்கள். தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற டிஜிபி சங்கர் ஜிவால், ‘ஓ’ போட்டுக் கொண்டே ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டார். தமிழகத்தில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்தான் உள்ளது. 6 மாதங்களில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசு செயலற்ற அரசாக உள்ளது என்றார்.
Read More: நகரும் அரண்மனைகள்.. VVIP-க்கள் மட்டும் பயணம் செய்யும் இந்த ரயிலின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?



