15 வயது சிறுமியைக் காதலித்த விவகாரம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாயைக் கொலை செய்துவிட்டு, அவரது இரு மகள்களையும் அழைத்துச் சென்ற பரோட்டா மாஸ்டர் ஞானபிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமிகள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேரி ரெஜிலா. இந்தத் தம்பதிக்கு பிளஸ்ஸி (15), பிரின்ஸா (14) என்ற இரு மகள்களும், பிளஸெட் ராஜா என்ற மகனும் உள்ளனர்.
அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை இவர்களது வீட்டுக்குள் புகுந்த நபர், குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்துகிருஷ்ணனும் அவரது மகன் பிளஸெட் ராஜாவும் பலத்த காயமடைந்தனர். அதே நேரத்தில், வீட்டிலிருந்த இரு மகள்களையும் அந்த நபர் அழைத்துச் சென்றதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேரி ரெஜிலாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. கொலை மற்றும் சிறுமிகள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஞானபிரகாஷை கைது செய்து இரு சிறுமிகளையும் மீட்டனர்.
விசாரணையில், ஞானபிரகாஷ் 15 வயதான பிளஸ்ஸியைக் காதலித்து வந்ததும், இதற்கு அவரது தாய் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி மேரி ரெஜிலாவைக் கொலை செய்துவிட்டு, இரு சிறுமிகளையும் அழைத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Also Read: பிரான்ஸில் வன்முறை போராட்டம்; இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!



