பள்ளி சீருடைக்கு மேல் ஹிஜாப் அணிய அனுமதி இல்லை! மாணவியின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்..

hijab 0

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவர், பள்ளி நிர்ணயித்த சீருடைக்கு மேல் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் இந்திரஜித் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அதில், பள்ளி நிர்வாகம் ஒரே மாதிரியான சீருடை விதிமுறையை அனைத்து மாணவர்களுக்கும் சமமாக அமல்படுத்தும் பட்சத்தில், அந்த விதிமுறையை நிர்ணயிப்பது பள்ளியின் நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்டது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனுதாரரான மாணவி, அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு 11ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்திருந்தார். தான் 6ஆம் வகுப்பு முதல் பள்ளி சீருடையுடன் தலைக்குட்டை அணிந்து வந்ததாகவும், இதற்கு முன்பு பள்ளி நிர்வாகம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை நிரூபிக்கும் வகையில் 8, 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான அடையாள அட்டைகள் மற்றும் குழு புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

ஆனால், 11ஆம் வகுப்பில் சேரும்போது பள்ளி நிர்வாகம் சீருடை விதிமுறைகளை காரணம் காட்டி தலைக்குட்டை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை அனுமதிக்க மறுத்ததாக மாணவி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மாணவி இரண்டு முறை புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மாவட்ட பள்ளிக் கல்வி ஆய்வாளரிடம் அறிக்கை கோரப்பட்டது.

விசாரணையின்போது, அந்தப் பள்ளி அனைத்து மதங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயிலும் இணைக் கல்வி நிறுவனமாக இருப்பதாகவும், மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை விதிமுறை கடைப்பிடிக்கப்படுவதாகவும் பள்ளி முதல்வர் தெரிவித்தார். ஒரு மாணவிக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது பள்ளியின் ஒழுங்கு முறையை பாதிக்கக்கூடும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே, மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தலைக்குட்டை அணிவது அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் கீழ் கருத்து வெளிப்பாட்டு உரிமையுடன் தொடர்புடையது என்றும், அது மாணவியின் கண்ணியம் மற்றும் தனிநபர் சுதந்திரத்துடன் தொடர்புடையது என்றும் வாதிட்டார். மேலும், அது மத நடைமுறையின் ஒரு பகுதியாக இருப்பதால், அதனைத் தடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

மறுபுறம், மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ தரப்பில், சம்பந்தப்பட்ட பள்ளி அரசு உதவி பெறாத தனியார் பள்ளி என்பதால் அதன் சீருடை விதிமுறைகளை நிர்ணயிப்பது பள்ளி நிர்வாகத்தின் கொள்கை சார்ந்த முடிவு என வாதிடப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடையை பின்பற்றச் செய்வது பள்ளியின் ஒழுங்கு மற்றும் ஒருமைப்பாட்டை பராமரிப்பதற்கான நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளியின் சீருடை விதிமுறை நல்லெண்ணத்துடன், பாகுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமாக அமல்படுத்தப்பட்டு, ஒழுக்கம் மற்றும் கல்வி நிறுவனத்தின் அடையாளத்தைப் பேணும் நோக்கத்தைக் கொண்டிருந்தால், அதனை நிர்ணயிக்கும் அதிகாரம் பள்ளி நிர்வாகத்துக்கு இருப்பதாகக் கூறியது.

மேலும், மாணவி இதற்கு முன்பு தலைக்குட்டை அணிந்து வந்தபோது பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால், எதிர்காலத்திலும் அதே நடைமுறையை தொடர அனுமதிக்க வேண்டும் என்ற சட்டப்பூர்வ உரிமையை அவர் பெற்றுவிட்டதாக கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

தலைக்குட்டை அணிவது தனது மதத்தின் அத்தியாவசியமான மத நடைமுறை என்பதை நிரூபிக்கும் வகையில் மத நூல்கள் அல்லது பிற ஆதாரங்களை மாணவி தரப்பில் சமர்ப்பிக்கவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், அதே மதத்தைச் சேர்ந்த சில மாணவிகள் தலைக்குட்டை அணியாமல் இருப்பது தொடர்பான புகைப்படங்களும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

பள்ளி நிர்வாகம் மாணவியின் மத நம்பிக்கையைத் தடுக்கவில்லை என்றும், பள்ளியின் ஒழுக்கம் மற்றும் சீருடை விதிமுறைகளை மட்டுமே அமல்படுத்துவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஒவ்வொரு மாணவரும் தங்களது விருப்பத்திற்கேற்ப சீருடையில் மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கப்பட்டால், ‘சீருடை’ என்ற கருத்துக்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்ணயித்த சீருடை விதிமுறையை மாற்றி ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கோரிய மாணவியின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Also Read: “உனக்கு வயசாகிடுச்சு… நம்ம பிரேக்கப் பண்ணிக்கலாம்!” 12 ஆண்டு கள்ளக்காதலை முறித்த பெண்.. ஆத்திரத்தில் 65 வயது கள்ளக்காதலன் செய்த கொடூரம்!

Saranya

Next Post

கொடூர சித்ரவதைக்கு ஆளான தமிழர்கள்!. தவெக அரசு என்ன செய்தது?. உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

Tue Aug 25 , 2026
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட 3 தமிழர்களின் உடற்கூறாய்வு குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தார். அப்போது, கர்நாடக […]
udhayanidhi assembly

You May Like