வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்வி மற்றும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கிய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து மூத்த கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. பெங்களூருவில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டி தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கவுள்ளது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் சேர்க்காதது குறித்துப் பேசிய அஸ்வின், இது கொஞ்சம்கூடப் பொது அறிவு இல்லாத செயல் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், பவுன்ஸ் கிடைக்கக்கூடிய மைதானத்தில், வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் குல்தீப்பின் கூக்ளி மற்றும் லெக்-ஸ்பின் பந்துகளைச் சமாளிக்க திணறுவார்கள். அத்தகைய வீரரை அணியில் இருந்து நீக்குவது ஆச்சரியமளிக்கிறது. அவர் ஆடியிருந்தால் ஸ்கோர் வித்தியாசத்தில் 15 முதல் 20 ரன்களைத் தடுத்திருக்க முடியும்” என்றார்.
இந்தூர் மைதானம் சிறியது என்பதால் அங்கு அவரை தவிர்த்ததை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய அஸ்வின், ஆனால் ராஞ்சியில் இந்தியாவின் தோல்விக்கு குல்தீப்தான் காரணம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது தவறு என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய குல்தீப் யாதவ், தொடக்க ஆட்டத்தில் 2/33 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இருப்பினும், 2-வது போட்டியில் 1/53 என ரன்களைக் கொடுத்தார். அதற்கு முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் அவர் 4/40 மற்றும் 2/65 என அசத்தலான பங்களிப்பை வழங்கி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



