இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாடு மாணவர்களின் வாழ்க்கையில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே செல்போன் பயன்பாட்டை மையமாகக் கொண்ட கருத்து வேறுபாடுகளும் அதிகமாகி வருகின்றன. கண்டிப்பது அவசியம் என்றாலும், குழந்தைகளின் மனநிலையையும் புரிந்துகொண்டு பொறுமையாக பேசுவது மிகவும் முக்கியம். சிறிய பிரச்சினையாக தோன்றும் விஷயங்கள் கூட, சில நேரங்களில் எதிர்பாராத சோகமான முடிவுகளுக்கு வழிவகுக்கலாம். இதுபோன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம். செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் – வரலட்சுமி தம்பதியினரின் மகள் தேவி ஸ்ரீ (14), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். தேவி ஸ்ரீ அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரை பலமுறை கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று காலை, பள்ளிக்குச் செல்ல தயாராகாமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால், பெற்றோர் அவரை கண்டித்து செல்போனை வாங்கியுள்ளனர்.
இதையடுத்து பள்ளிக்குச் சென்ற மாணவி, மதியம் வயிற்று வலி இருப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்தார். தகவலறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்ததில் “நீங்கள் திட்டியதால் பள்ளியில் கொடுத்த 10 சத்து மாத்திரைகளை வீட்டில் வைத்து தான் தின்றதாகவும், பள்ளியில் வைத்து மேலும் 20 மாத்திரைகளை தின்று விட்டதாகவும் கூறி உள்ளாள்”. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மாணவியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி தேவி ஸ்ரீ உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உயிரிழப்பு சேலம் மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: “உனக்கு என்னைவிட கள்ளக்காதலிதான் முக்கியமா?” ஆத்திரத்தில் 7 மாத குழந்தையின் தாய் செய்த காரியம்…



