பொதுவாகவே, நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணம்தான் நிலைக்கும். ஆனால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால், அந்தப் பணம் நீண்ட நாட்கள் நம்மிடம் நிலைக்காது. சில நேரங்களில், அப்படிப்பட்ட ஆசையே நம் வாழ்க்கையை சீரழித்துவிடும். அதற்கு உதாரணமாக, ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீஹரி. புச்சிரெட்டிபாலத்தில் வேளாண்மை அதிகாரியாக வேலை செய்து வரும் இவருக்கு லாவண்யா என்ற மனைவி உள்ளார். லாவண்யாவிற்கு 33 வயதான ஹரிகிருஷ்ணா என்ற தம்பி உள்ளார். இந்நிலையில், தனது மைத்துனரான ஹரிகிருஷ்ணா பெயரில், ஸ்ரீஹரி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பதிவு செய்து, பணத்தையும் கொடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வீடு கட்டுவதற்கு பணம் வேண்டும் என்று ஸ்ரீஹரி தான் கொடுத்த பணத்தை ஹரிகிருஷ்ணாவிடம் திரும்ப கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிகிருஷ்ணா, பணத்தை திருப்பி கொடுக்க கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் சொத்துக்களையும் திருப்பி கொடுக்க மனம் இல்லாத ஹரிகிருஷ்ணா, ஸ்ரீஹரியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி ஹரிகிருஷ்ணா, பெஞ்சலகோனா கோயிலுக்கு ஸ்ரீஹரியை காரில் அழைத்து சென்றார். அங்கிருந்து திரும்பி வீட்டிற்க்கு செல்லும்போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஹரிகிருஷ்ணா சென்றுள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி அங்கு வந்திருந்த ஹரிகிருஷ்ணாவின் நண்பர்களான ரவீந்திரா, யானதி ஆகியோர் உதவியுடன், ஸ்ரீஹரிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்துள்ளார். பின்னர் தனது சகோதரி லாவண்யாவிற்கு போன் செய்த ஸ்ரீஹரி, கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வலியில் உனது கணவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த லாவண்யா கதறி அழுதுள்ளார். இதையடுத்து, ஸ்ரீஹரியின் உடல் தகனம் செய்யப்பட்டது. பின்னர் ஒரு சில நாட்களிலேயே ஹரிகிருஷ்ணா, மீதமுள்ள சொத்துக்களையும் தன் பெயரில் அவசரம் அவசரமாக பதிவு செய்ய முயன்றார்.
இதனால் லாவண்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நெல்லூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹரிகிருஷ்ணாவின் நண்பர்களான ரவீந்திரா மற்றும் யானதி ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஸ்ரீஹரி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவான ஹரிகிருஷ்ணாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்து பதறிப்போன ஹரிகிருஷ்ணா, தனது மனைவி பிரணிதி, 5 வயது மகள் மூகாம்பிகா, 3 வயது மகன் கவுசிகிருஷ்ணா ஆகியோருடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி, நேற்று பிரகாசம் மாவட்டம் சிங்கராயகொண்டா ரயில் நிலையத்தின் 2ம் நடைமேடைக்கு ஹரிகிருஷ்ணா தனது குடும்பத்தோடு சென்றுள்ளார். பின்னர், அங்கு வந்த சரக்கு ரயில் முன் குழந்தைகளை தள்ளிய தம்பதியினர், தாங்களும் அந்த ரயில் முன் பாய்ந்துள்ளனர். இதில் 4 பேரும் உடல் சிதறி இறந்தனர்.
இது குறித்து அறிந்த ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கொலை வழக்கின் விசாரணையில் அலட்சியமாக இருந்ததாக புச்சிரெட்டிபாலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் 23 ஊழியர்களையும் எஸ்பி அனிதாவேஜெண்ட்லா இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆய்வாளர் மாதாங்கி சீனிவாசராவ் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.
Also Read: “ஏன்டா உனக்கு திருட வேற பொருளே கிடைக்கலையா?” பெண்களை அலறவிட்ட சைக்கோ திருடன்!



