இந்தோனேசியாவில் 240 பயணிகளுடன் ஜாவா கடலில் சென்றுகொண்டிருந்த பயணிகள் கப்பல் திடீரென தகவல் தொடர்பை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலைத் தேடும் பணியை மீட்புப் படையினர் இன்று தொடங்கியுள்ளனர்.
கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் இருந்து, போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் தலைநகரான பஞ்சர்மசினை நோக்கி Virgo Transport 8 என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது.
ஜாவா கடலில் பஞ்சர்மசின் துறைமுகத்தில் இருந்து சுமார் 148 கிலோமீட்டர் தொலைவில் சென்றபோது கப்பலுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கப்பலின் கடைசி இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் பஞ்சர்மசின் தேடல் மற்றும் மீட்பு அலுவலகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. மீட்புக் குழுவினர் சம்பவம் நடந்ததாக கருதப்படும் கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பஞ்சர்மசின் மீட்பு அமைப்பின் செயல்பாட்டுப் பிரிவு தலைவர் அரியாண்டோ அர்டி கூறுகையில், கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை உறுதி செய்ததுடன், ட்ரிசக்தி பகுதியில் செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், கப்பல் மோசமான வானிலையை எதிர்கொண்டதாக தகவல் கிடைத்த பின்னர் அதன் இயக்குநர் தரப்பினர் அதிகாரிகளிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.
கப்பலில் இருந்த 240 பேரின் நிலை குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. உயிரிழப்பு தொடர்பான தகவலும் இதுவரை பதிவாகவில்லை. கப்பலை கண்டறிந்து அதில் பயணித்தவர்களின் நிலையை உறுதி செய்யும் பணியில் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Also Read: நள்ளிரவில் பயங்கர விபத்து.. 2 பேர் பலி, 12 பேர் காயம்! அடுத்தடுத்து மோதிய லாரிகள்!



