உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், ராங் நம்பர் மூலம் அறிமுகமான பெண்ணை காதலித்த இளைஞர் ஒருவர், அந்த உறவு ஏற்படுத்திய சிக்கலில் சிக்கி ரூ.4 லட்சத்தை இழந்துள்ளார். அந்தரங்க வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை சைபர் கிரைம் போலீஸார் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கைது செய்துள்ளனர்.
பரேலியைச் சேர்ந்த இளைஞரின் செல்போனுக்கு எதிர்பாராத வகையில் ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தவறுதலாக அழைத்ததாகக் கூறி அந்தப் பெண் பேச்சைத் தொடங்கியுள்ளார். பின்னர் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்த நிலையில், அந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இளைஞரின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, அந்தப் பெண் அவரை வீடியோ காலில் பேச அழைத்துள்ளார். காதலியை நம்பிய இளைஞரும் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது அவர் தனிப்பட்ட முறையில் இருந்த காட்சிகளை அந்தப் பெண் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.
வீடியோ அழைப்பு முடிந்ததும் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தன்னிடம் இருந்த பதிவைக் காட்டி இளைஞரிடம் பணம் கேட்ட அந்தப் பெண், பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர், பிரச்சினை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்ற பயத்தில் முதலில் ரூ.2 லட்சத்தை அந்தப் பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், அதன்பிறகும் பணம் கேட்டு மிரட்டல் தொடர்ந்துள்ளது. மீண்டும் ரூ.2 லட்சம் கேட்டதால், அதையும் கொடுத்துள்ளார். இவ்வாறு மொத்தம் ரூ.4 லட்சத்தை இழந்த பின்னரே, தான் சிக்கியிருப்பதை உணர்ந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். செல்போன் தொடர்புகள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்து, பணம் பறித்த பெண்ணின் இருப்பிடத்தை போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பதுங்கியிருந்த அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அறிமுகம் இல்லாத நபர்களுடன் ஆன்லைனில் பழகும்போது, தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது பின்னர் மிகப்பெரிய பிரச்சினையாக மாறக்கூடும். குறிப்பாக, அந்தரங்க வீடியோ அல்லது புகைப்படங்களை வைத்து யாரேனும் பணம் கேட்டு மிரட்டினால், பயந்து பணம் செலுத்தாமல் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிப்பது அவசியம்.
Also Read: நேபாள பேரிடர்: 163 இந்தியர்கள் மீட்பு… சுரங்கங்களில் தொடரும் மீட்புப் பணி; பலி எண்ணிக்கை 1,050 ஆக உயர்வு!



