40 ஆண்டுகள் தலைமறைவு..! அரசுப் பள்ளி ஆசிரியரான ஆயுள் தண்டனை கைதி..! மீண்டும் சிக்கியது எப்படி? வறுத்தெடுத்த கோர்ட்..!

jail

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் பெத்தமுப்பாரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தெல வீரன்னா என்பவருக்கு, கடந்த 1983-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் வாராங்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர், அதே ஆண்டு டிசம்பரில் 3 மாத கால பரோலில் வெளியே வந்தார். ஆனால், பரோல் காலம் முடிந்த பின்னர் சிறைக்குத் திரும்பாமல் மாயமானார்.


காவல்துறை அவரைத் தேடி வந்த நிலையில், தனது அடையாளங்களையும் தண்டனை விபரங்களையும் சாமர்த்தியமாக மறைத்து, மஹபூபாபாத் மாவட்டத்திலேயே ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கு சுமார் மூன்று தசாப்தங்களாகப் பணியாற்றிய வீரன்னா, கடந்த 2004-ஆம் ஆண்டு ‘சிறந்த ஆசிரியர்’ விருதையும் பெற்றுள்ளார். பின்னர் 2013-ல் பணி ஓய்வு பெற்று முழு ஓய்வூதியப் பலன்களையும் அனுபவித்து வந்தார்.

சுமார் 40 ஆண்டுகள் போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவரை, கடந்த 2024-ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப் படை போலீசார் ஒருவழியாக கண்டுபிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். அத்துடன் அவருக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பரோல் மற்றும் தண்டனைக் குறைப்பு சலுகைகள் சிறைத் துறையால் ரத்து செய்யப்பட்டன.

இச்சூழலில், முதியவரான தனது கணவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் சிறைத்துறையின் உத்தரவை ரத்து செய்து பரோல் வழங்கக் கோரி வீரன்னாவின் மனைவி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.மாதவிதேவி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரரின் கணவர் சட்டத்தை ஏமாற்றி தலைமறைவாக வாழ்ந்ததோடு, அரசு வேலையும் பெற்று தனது வாழ்க்கையின் பொற்காலத்தை சிறைக்கு வெளியே சகல வசதிகளுடன் கழித்துள்ளார். இந்த விவகாரம் சிறைத் துறையின் உச்சக்கட்ட அலட்சியத்திற்கு கண்ணாடியாக உள்ளது” என்று கடுமையாகச் சாடினார். மேலும், எதிர்காலத்தில் பரோலில் செல்லும் கைதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க ‘டிராக்கிங் சிஸ்டம்’ உள்ளிட்ட நவீன நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஆயுள் தண்டனை கைதி ஒருவர் எந்த சான்றிதழ்களைக் கொடுத்து அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார், கல்வித்துறை இத்தனை ஆண்டுகளாகப் பின்னணி சரிபார்ப்பு செய்யாமல் எப்படி மெத்தனமாக இருந்தது, ஒரு கொலைக் குற்றவாளிக்கு சிறந்த ஆசிரியர் விருது எப்படி வழங்கப்பட்டது என்ற கேள்விகள் இன்னும் மர்மமாகவே நீடிக்கின்றன.

Read More : ரூ.20 கோடி வரை ஏமாந்த மக்கள்..! ஏஜெண்டுகளின் வீடுகள் சூறை..! போலீஸ் வாகனங்கள் மீது கல் வீச்சு..! பரபரப்பு.. பதற்றம்..!

You May Like