சென்னை கோயம்பேட்டில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக துணை நடிகை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்தது தெரியவந்தது.
சிறுமியை மீட்ட போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கே.கே.நகரை சேர்ந்த அஞ்சலி, ஆந்திராவைச் சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா, மற்றும் நாகராஜ் ஆவர். இவர்கள்மீது போக்சோ சட்டம், சிறார் நீதி சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலீஸ் விசாரணையில், சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும், தாய் மறுமணம் செய்து வேறு இடத்தில் வசித்து வருகிறார் என்றும் தெரியவந்தது. இதனால் சிறுமி தனது தாயின் தோழியான அஞ்சலியின் பராமரிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்தார். இந்த சூழ்நிலையை பயன்படுத்திய அஞ்சலி ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியதும் போலீஸ் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஏற்கனவே பாலியல் தொழிலில் சிக்கியிருந்த பீகார், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 26 பெண்கள் மீட்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். குடும்ப பிரச்சனையால் வீட்டில் இருந்து வெளியேறிய பெண்களையும், தாய் தந்தை இல்லாத குழந்தைகளையும் குறிவைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: உடற்பயிற்சி கருவியை பயன்படுத்துவதில் மோதல்.. ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்..!! பகீர் வீடியோ..