கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் அடிப்பது போன்ற வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.
இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து தனிப்படை டிஎஸ்பி சண்முகசுந்தரமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் அடிப்பது போன்ற வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்துள்ள ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு துபாய் நாட்டிற்குச் சுற்றுலா விசாவில் அனுப்பியுள்ளார். அதன்படி வெளிநாட்டிற்குச் சென்ற ஜெயபால் ஒரே மாதத்தில் உடல் நலன் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் ஜெயபால் சொந்த ஊருக்குத் திரும்பினார். இருப்பினும் ஜெயபால் 2 நாட்களில் உயிரிழந்தார்.
இது குறித்து வெளிநாட்டிற்கு அனுப்பிய விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கூறி ஜெயபாலின் மனைவி மலர் கச்சராப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜெயபால் மனைவி மலர் இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் 2 மாதங்கள் ஆகியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மலரின் உறவினரான ஒருவர் கச்சராப்பாளையம் காவல்நிலையத்தில் சென்று ஆய்வாளரிடம் கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த காவலர்கள் அவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது கடந்த மாதம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: சரத்குமாரின் 3BHK மட்டும் இல்ல.. இன்னும் ரெண்டு படம் இருக்கு.. நீங்க எந்த படத்துக்கு போறீங்க..?