பண்டிகைக் காலம் நெருங்கும்போது இனிப்புக் கடைகளில் வண்ணமயமான இனிப்பு வகைகள் விற்பனைக்கு குவிகின்றன. குறிப்பாக முந்திரி பர்ஃபி, காஜு கத்லி உள்ளிட்ட இனிப்புகளின் மேற்பரப்பில் வெள்ளி நிறத்தில் மின்னும் மெல்லிய படலம் பலரையும் கவர்கிறது. இந்தப் படலம் உண்மையான வெள்ளியால் தயாரிக்கப்பட்டதா என்ற கேள்வி பலருக்கும் எழுவதில்லை. ஆனால், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் சில இடங்களில் உண்மையான வெள்ளிக்குப் பதிலாக அலுமினியம் போன்ற மலிவான உலோகங்களைப் பயன்படுத்தி போலியான படலங்கள் விற்பனை செய்யப்படுவது உடல்நலப் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.
உண்மையான வெள்ளி வர்க்கிற்குப் பதிலாக கலப்பட உலோகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை உட்கொள்வது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, சில உலோகங்கள் அதிக அளவில் உடலில் சேரும்போது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படலாம். மேலும், செரிமானப் பிரச்சினைகள் மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இனிப்புகளை வாங்கும்போது அவற்றின் தோற்றத்தை மட்டும் வைத்து தரத்தை முடிவு செய்யாமல் இருப்பது அவசியம்.
இனிப்புகளில் பயன்படுத்தப்படும் வெள்ளிப் படலத்தைச் சரிபார்க்க சில வழிகள்:
வெள்ளிப் படலத்தை விரல்களால் மெதுவாகத் தேய்த்துப் பார்க்கும் சோதனையைச் சிலர் பரிந்துரைக்கின்றனர். உண்மையான வெள்ளிப் படலம் எளிதில் நொறுங்கி விரலில் ஒட்டக்கூடும் என்றும், அலுமினியத்தால் செய்யப்பட்ட படலம் அதேபோல் மாறாமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், படலத்தின் நிறத்தையும் கவனிக்கலாம். அளவுக்கு அதிகமான வெண்மை அல்லது கண்களைக் கூசச் செய்யும் பளபளப்பு இருந்தால் சந்தேகத்துடன் அணுக வேண்டும். உண்மையான வெள்ளிப் படலத்தின் மினுமினுப்பு பொதுவாக மென்மையாக இருக்கும்.
படலத்தை எரித்துப் பார்ப்பதன் மூலம் உண்மையான வெள்ளியையும் போலிப் படலத்தையும் வேறுபடுத்தலாம் என்ற சோதனை முறையும் பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபோன்ற வீட்டுச் சோதனைகள் மட்டும் ஒரு பொருளின் தூய்மையை உறுதிப்படுத்தாது. எனவே, படலத்தின் தரம் குறித்து சந்தேகம் இருந்தால் அதைச் சோதித்துப் பார்க்க முயற்சிப்பதைவிட, படலம் இல்லாத இனிப்புகளைத் தேர்வு செய்வதே பாதுகாப்பான முடிவாக இருக்கும்.
பண்டிகைக் காலத்தில் இனிப்புகள் வாங்கும்போது நீண்டகாலமாக நம்பகத்தன்மையுடன் செயல்படும் கடைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. இனிப்புகளின் அழகையும் பளபளப்பையும் பார்த்து மட்டும் வாங்காமல், அவற்றின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக வாங்கும் இனிப்புகள் உடல்நலப் பாதிப்புக்கு வழிவகுக்காமல் இருக்க நுகர்வோர் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
Also Read: கேக் வாங்கிக் கொடுத்த உறவினர் முதல் குடும்பத்தினர் வரை.. சிறுமி மாயமான வழக்கில் தீவிர விசாரணை!


