திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல இலந்தை குளத்தை சேர்ந்தவர் ஹரி நாடார். கழுத்து முழுவது கிலோ கணக்கில் நகை அணிந்ததன் மூலம் பலரால் அறியப்படுகிறார். இவர் மீது 24 குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் இவர் பனங்காட்டு படை என்ற நாடார் அமைப்பை ஒன்றை நடத்தி வருகிறார். 2019 ஆம் ஆண்டு நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நான்காயிரத்து 243 வாக்குகள் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆளங்குளம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சியாக போட்டியிட்டார். இதில் 37 ஆயிரத்து 229 வாக்குகள் பெற்றார்.
தற்போது ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சிறையில் இருந்தபடியே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தற்போதைய சட்ட விதிகளின்படி கைதிகளுக்கு வாக்களிக்க அனுமதி வழங்க இயலாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். ஜனநாயக நாட்டில் வாக்குரிமை அடிப்படை உரிமையாக இருந்தாலும், அது முழுமையாக எல்லோருக்கும் பொருந்தாது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. குறிப்பாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 62-ன் படி, தண்டனை அனுபவிக்கும் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற முடியாது என்று தேர்தல் ஆணையம் வாதிட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம், சட்டத்தில் மாற்றம் செய்யாமல் இதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் கூறியது.



