ராஜராஜ சோழனின் 1,040வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர்.1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1040-வது சதய விழா வரும் 31 மற்றும் 1ம் தேதி என 2 நாட்கள் அரசு விழாவாக நடைபெறுகிறது
தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் 1040-ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு 400 கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகிக்கிறார். திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளுரை வழங்குகிறார்.
சதய விழா தஞ்சையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது, முன்னதாக,பந்தல் கால் நடும் நிகழ்ச்சி கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. ராஜா ராஜா சோழனின் 1040வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு முதல் சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



