சமூக வலைதளங்களில் ரீல் எடுக்கும் ஆர்வம் உயிரையே பறித்த சோகச் சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்புடன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இளைஞர், பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டம் கந்தாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தபன் குமார் பிரதான். பாம்புகளைப் பிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்த இவர், தான் மீட்கும் பாம்புகள் மற்றும் அந்தப் பணிகள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் கிராமத்தில் உள்ள கிளப் கட்டடத்தின் வராண்டாவில் நாகப்பாம்புடன் ரீல் பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது அவரைப் பாம்பு கடித்தது. விரல், முழங்கை உள்ளிட்ட கையின் பல்வேறு பகுதிகளில் கடிபட்டதால், சிறிது நேரத்திலேயே அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.
இதையடுத்து, அவரை மீட்ட குடும்பத்தினர் முதலில் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் பூரி மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், தபன் குமார் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பாக பூரி சதர் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவரின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாம்புகளை மீட்பதில் அனுபவம் பெற்றிருந்த தபன் குமாருக்கு, நாகப்பாம்புடன் வீடியோ எடுத்தபோது ஏற்பட்ட இந்த விபரீதம் அவரது குடும்பத்தினரையும் கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிடும் ஆர்வத்தில் விஷப்பாம்புகளுடன் பாதுகாப்பற்ற முறையில் செயல்படுவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
Also Read: வங்கிக் கணக்கில் திடீரெனப் பணம் வருதா?.. SBI விடுத்த முக்கிய எச்சரிக்கை!



