தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை..
இதனிடையே நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.. எனினும் 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அர்லேகர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த சூழலில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை இன்று மீண்டும் விஜய் சந்தித்தார்.. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத நிலையில் மீண்டும் ஆளுநரை சந்தித்துள்ளார்.. 2-வது முறையாக விஜய் ஆளுநரை சந்தித்த நிலையில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பாரா அல்லது பெரும்பான்மை இல்லை என்று கூறி மேலும் காலம் தாழ்த்துவாரா என்பதில் குழப்பம் நீடிக்கிறது..
எனினும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் குறிப்பிட்ட நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பது தான் வழக்கமான நடைமுறை.. ஆனால் ஆட்சியமைக்கவே பெரும்பான்மை உறுப்பினர்கள் தேவை என்று கூறி ஆளுநர், விஜய்க்கு அழைப்பு விடுக்காமல் இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது..
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநரிடன் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் திரு. ஸ்டாலின் அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன். இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள்.
இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம். ‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : திமுக – அதிமுக கூட்டணியா..? இபிஎஸ்-ன் முடிவு என்ன..? செம்மலை பரபரப்பு பதில்..!



