தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஆனால் இதுவரை தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு வழங்கவில்லை. இதற்கிடையில், ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியல் அமைப்புக்கு எதிரானதாக இருப்பதாக பல்வேறு கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை தாமதப்படுத்துவது ஜனநாயக நடைமுறைக்கு முரணானது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த சூழ்நிலையில், மாணவர் காங்கிரஸ் அமைப்பு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. “ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும். இல்லையெனில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என அவர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில தமிழக வெற்றி கழகம் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களின் தெளிவான ஆதரவை பெற்றுள்ளது. மேலும் அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கமும் த.வெ.க. தலைவர் விஜய் அவர்களுக்கு தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.
இந்நிலையில், பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள கூட்டணியை ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் இதுவரை அழைக்காதது தமிழக மக்களிடையே மிகப்பெரிய சந்தேகத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. இந்த ஜனநாயக விரோத தாமதத்திற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் அழுத்தம் செயல்பட்டு வருகிறது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
இதனை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பை மதித்து, பெரும்பான்மை ஆதரவை கொண்ட கூட்டணியை உடனடியாக ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அழைக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய ஜனநாயக போராட்டம் நடத்தப்படும் என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். என்று கூறப்பட்டுள்ளது.



