RIP | திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு..!! சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்..!!

Vijay 2026 4

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய பழம்பெரும் திரைப்பட நடிகை சவுகார் ஜானகி (94) உடல்நலக் குறைவால் காலமானதை தொடர்ந்து, அவரது மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய திரையுலகில் தனது இயல்பான மற்றும் தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்த சவுகார் ஜானகி, முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவரது மறைவு குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முதலமைச்சர், சவுகார் ஜானகியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 7 தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலகில் இடைவிடாது பயணித்து எண்ணற்ற அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது ஒப்பற்ற கலைப்பணி என்றென்றும் போற்றத்தக்கது என முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் தன் நடிப்பாற்றலால் சாதனை படைத்த சவுகார் ஜானகி, இந்திய அரசின் உயரிய ‘பத்மஸ்ரீ’, தமிழக அரசின் ‘கலைமாமணி’ மற்றும் ஆந்திர அரசின் ‘நந்தி’ விருது உள்ளிட்ட எண்ணற்ற கவுரவங்களைப் பெற்றவர் என்றும், அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவுகார் ஜானகியைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது ஆன்மா இறைவனின் திருவடிகளில் சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.

Read More : “திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்”!. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

You May Like