பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தின் 20-வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து நாளை விடுவிக்கிறார்.
பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தின் அடுத்த தவணை நாளை விடுவிக்கப்படும். வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், அதிகபட்ச விவசாயிகளை இந்த பலன் சென்றடைவதை உறுதி செய்யவும், மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
தேசிய, மாநில, மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் உள்ள விவசாயிகளை இந்த திட்டத்துடன் இணைக்குமாறு அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார், மேலும் இந்த நிகழ்வை நாடு தழுவிய பிரச்சாரமாக ஏற்பாடு செய்ய அழைப்பு விடுத்தார். வேளாண் அறிவியல் மையங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் போது, பிரதமர் மோடியின் தலைமையில், ரூ.6,000 மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு மாற்றப்படுவதாகவும், ஒவ்வொரு தவணையும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
நாளை நடைபெறும் நிகழ்வில் விவசாயிகள் முனைப்புடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுகொண்ட மத்திய அமைச்சர் திட்டத்தின் மூலம் பயனடையவும், விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து தொடர்ந்து அறிந்திருக்கவும் இது ஒரு வாய்ப்பு என்று கூறினார். 2019-ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 19 தவணைகள் மூலம் ரூ.3.69 லட்சம் கோடி விவசாயிகளின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. 20வது தவணையில், 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி பரிமாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.