ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம்…! ஏழைகள் மக்களுக்கு கான்கிரீட் வீடு…! இபிஎஸ் அசத்தல் தேர்தல் வாக்குறுதி…!

Eps

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.


‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்; என்று தலைப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் பேசிய அவர்: திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி வழங்கி, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சி மாநகராட்சியில் மின்கட்டணம் 67% உயர்வு, வரிகளையும் 100 முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு.

விலைவாசியல் மக்கள் படும் துன்பம் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய் என்ன விலை… இப்போது என்ன விலை என்று ஒப்பிட்டுப் பாருங்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் ஒதுக்கி, அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களுக்காக திமுக ஆட்சி செய்யவில்லை, வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்கிறது. இந்த குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல் இது. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பேசவில்லை, யதார்த்த உண்மையைச் சொல்கிறேன். திமுக குடும்பத்தைத்தான் அரசாங்கமாகப் பார்க்கிறார்கள்.

கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து அதனை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.

ஏழைப் பெண்களின் பொருளாதார சூழலால் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் 6 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுசேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். ஏழைகளுக்கான திட்டங்களை நிறுத்தியதில் தான் திமுக சாதனை படைத்திருக்கிறது. மீண்டும் அந்த திட்டங்கள் எல்லாம் தொடரும்.

அதிமுக அரசு அமைந்ததும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கையை ஏற்று, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ரூ.75 ஆயிரம் மானியமாக கொடுக்கப்படும். அனைத்து ஏழைகள், பட்டியல், பழங்குடியின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.

Vignesh

Next Post

உலகில் 6 பேரில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறார்!. உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அறிக்கை!

Sun Aug 24 , 2025
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், உடல்நலம் தொடர்பான பல புதிய அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றன. அவற்றில் ஒன்று மலட்டுத்தன்மை. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கை இந்தப் பிரச்சினை தொடர்பான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளது. அறிக்கையின்படி, உலகம் முழுவதும் இனப்பெருக்க வயதுடைய ஒவ்வொரு 6 பெரியவர்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த எண்ணிக்கை தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பத்திற்கும் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். WHO அறிக்கை என்ன […]
infertility WI FI 11zon

You May Like