வங்கி துறையில் அரசு வேலைக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஜூனியர் அசோசியேட் (Customer Support and Sales) பணியிடங்களுக்கு பெரிய அளவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9,766 பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் 7,680 வழக்கமான பணியிடங்களும், 2,086 பின்னடைவு பணியிடங்களும் அடங்குகின்றன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்கியுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு அல்லது இறுதி செமஸ்டர் படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் 2026 டிசம்பர் 31-க்குள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் வயது 2026 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும். PwBD, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பிற பிரிவினருக்கும் விதிகளின்படி வயது தளர்வு உள்ளது.
ஒரே ஒரு மாநிலத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
இந்த ஆட்சேர்ப்பில் ஒருவர் ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் உள்ளூர் மொழியை அறிந்திருப்பதும் அவசியம். தற்போது SBI-யில் கிளார்க் பணியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், ஏற்கெனவே SBI-யில் கிளார்க் பணியில் இருந்து ராஜினாமா செய்தவர்களுக்கும் இந்த ஆட்சேர்ப்பில் விண்ணப்பிக்க தகுதி இல்லை.
தேர்வு எப்படி நடைபெறும்?
SBI கிளார்க் பணிக்கான தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும். முதலில் Preliminary Examination நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் Main Examination-க்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வுக்குப் பிறகு, விண்ணப்பித்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கான உள்ளூர் மொழித் தேர்வில் பங்கேற்க வேண்டும். இறுதித் தேர்வில் முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். Preliminary தேர்வு மதிப்பெண்கள் இறுதி தகுதிப் பட்டியலுக்கு கணக்கிடப்படாது.
சம்பளம் எவ்வளவு?
SBI கிளார்க் பணிக்கு தேர்வாகும் பட்டதாரிகளுக்கு ரூ.26,730 ஆரம்ப அடிப்படை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனுடன் பல்வேறு படிகள் மற்றும் சலுகைகள் சேர்க்கப்படுவதால் மொத்த மாத சம்பளம் சுமார் ரூ.45,888 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கழிவுகளுக்குப் பிறகு கையில் கிடைக்கும் சம்பளம் சுமார் ரூ.39,529 ஆக இருக்கும். அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, போக்குவரத்து படி, சிறப்பு படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் இதில் அடங்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் SBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.bank.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 31 விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் விதிமுறைகளை முழுமையாக சரிபார்த்து விண்ணப்பிப்பது அவசியம்.
Also Read: சொத்து வரி 4 மடங்கு உயர்வா?… ரூ.5,000 கட்டியவருக்கு ரூ.28,000! மாநகராட்சி பரபரப்பு விளக்கம்!


