மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே மானிய விலையிலான எல்பிஜி சென்றடைவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை உதவும்.
இதுதொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு கேஸ் இணைப்பையும் ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளருடன் இணைப்பது, மானிய சிலிண்டர்கள் வணிக பயன்பாட்டிற்குத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், போலியான மற்றும் தகுதியற்ற இணைப்புகளை நீக்கவும் இது உதவும். “இந்த நடவடிக்கை எந்தவொரு தகுதியான குடும்பத்திற்கும் எல்பிஜி வழங்குவதைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்படவில்லை. ஒவ்வொரு பயனாளியும் எளிதாக இதை முடிக்க பல வழிகள் வழங்கப்பட்டுள்ளன” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டியதில்லை; அவர்களுக்கு வழக்கம்போல சிலிண்டர் விநியோகம் தொடரும். இதுவரை முடிக்காதவர்கள், சரிபார்ப்பை பூர்த்தி செய்த பின்னரே மானிய விலையில் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும்.
ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை பூர்த்தி செய்வதற்கான வழிகள்: சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் ஊழியர், எண்ணெய் நிறுவனத்தின் (OMC) மொபைல் செயலி மூலம் அந்த இடத்திலேயே சரிபார்ப்பை முடித்துத் தருவார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி விநியோகஸ்தர் (Distributor) அலுவலகத்திற்குச் சென்று பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே எண்ணெய் நிறுவனங்களின் செயலிகள் வாயிலாகச் சுயமாக முடித்துக் கொள்ளலாம்.
பயோமெட்ரிக் செய்ய விரும்பாதவர்களுக்கு என்ன நடக்கும்?ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்ள விரும்பாதவர்களுக்கும் எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும். எனினும், அவர்கள் தங்களது இந்த விருப்பத்தை எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், மொபைல் செயலி, வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp chatbot), IVRS அல்லது பிற டிஜிட்டல் வழிகளில் பதிவு செய்ய வேண்டும்.
இத்தகைய வாடிக்கையாளர்களுக்கு மானியம் எதுவும் இன்றி, அப்போதைய சந்தை விலையில் 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்கள் (இருப்புக்கு ஏற்ப) விநியோகிக்கப்படும்.
கால அவகாசம் நீட்டிப்பும் விழிப்புணர்வும்: முன்னதாக, பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க ஜூன் 30 வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஜூலை 31, ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 23, ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 மற்றும் இறுதியாக செப்டம்பர் 14 வரை பலமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அக்டோபர் 2023 முதல் நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த முகாமின் கீழ், எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் 12 கோடிக்கும் அதிகமான எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கி வரும் நிதி நிதியுதவி பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14.2 கிலோ சிலிண்டருக்கான மறைமுக மானியம் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.721-ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 2026 நிலவரப்படி சுமார் ரூ.210-ஆக உள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.



