கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் உள்ள சர்வோதயா அரசுப் பெண்கள் பள்ளியில் பயின்று வந்த அன்வி என்ற 10 வயது சிறுமி, வகுப்பிற்குப் பாடப் புத்தகங்களைக் கொண்டு வரவில்லை என்பதற்காக வெயிலில் பல மணி நேரம் நிற்கவைத்துத் தண்டிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளியில் அளிக்கப்பட்ட இக்கடுமையான தண்டனையால் சிறுமி கடும் வெயிலில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையினர் கூறுகையில், சிறுமியின் உடல் பெற்றொரிடம் ஒப்படைக்கப்பட்டபோது குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்தின் மீது எவ்வித புகாரும் தெரிவிக்கவில்லை என்றும், இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகே இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு ஏற்கனவே ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருந்ததா மற்றும் இந்தத் தண்டனைதான் அவரது உயிரிழப்பிற்கு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் பள்ளிகளில் உடல்ரீதியான தண்டனை அளிப்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன; ‘குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE), 2009’-ன் பிரிவு 17-ன் கீழ் இத்தகைய தண்டனைகள் தடை செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு குழந்தையையும் உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ துன்புறுத்தவோ தண்டிக்கவோ கூடாது என்றும், இவிதியை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.
டெல்லி கல்வி இயக்ககம் ஏற்கனவே அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் மாணவர்களை உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது எனப் பலமுறை சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில், இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



