EPFO சந்தாதாரர்களுக்கு 100 சதவீத பணம் திரும்பப் பெறுதல் என்ற நல்ல செய்தியை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.. ஆனால் அதே நேரம் ஒரு அதிர்ச்சி செய்தியையும் அரசாங்கம் அளித்துள்ளது. ஆம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் PF (Provident Fund) தொகையை முழுமையாக எடுக்க இப்போது 12 மாத வேலையின்மையை முடிக்க வேண்டும். அதாவது, ஒருவர் வேலையை இழந்த ஒரு வருடத்திற்குப் பிறகுதான் PF கணக்கில் உள்ள முழுத் தொகையையும் பெற முடியும். அதேபோல், ஓய்வூதிய நிதியை முழுமையாக திரும்பப் பெற 36 மாத வேலையின்மை காலம் தேவைப்படும்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் நடந்த EPFO மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டது. புதிய விதியின்படி, உறுப்பினர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் PF கணக்கு நிதியில் குறைந்தது 25 சதவீதத்தை பராமரிக்க வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தின் கீழ், வேலை இழந்த பிறகு இரண்டு மாதங்கள் தொடர்ச்சியான வேலையின்மைக்குப் பிறகு PF தொகையை முழுமையாக திரும்பப் பெறலாம். மேலும், கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், பல உறுப்பினர்கள் தங்கள் PF தொகையை முழுமையாக திரும்பப் பெறுவார்கள்.
ஆனால் தற்போது இதுதொடர்பான புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளது.. அமைச்சர் மாண்டவியா இதுகுறித்து பேசிய போது, “பிஎஃப் கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் 25 சதவீதத்தை நிரந்தர வைப்புத்தொகையாக வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள 75 சதவீதத்தை உறுப்பினர்கள் வருடத்திற்கு 6 முறை வரை திரும்பப் பெறலாம்” என்றார்.
திங்கட்கிழமை நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் இந்தத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது. புதிய திட்டம் உறுப்பினர்கள் தேவைப்படும் நேரங்களில் நிதியை அணுக உதவும் என்று அமைச்சர் விளக்கினார். கணக்கு மூடப்படும் போது குறைந்தபட்சம் சிறிது தொகையையாவது பாதுகாப்பாக வைத்திருக்கும் வாய்ப்பையும் இது வழங்கும்.
25% விதியின் பின்னணியில் உள்ள யோசனை – இந்த விதியை அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய காரணம் – ஈபிஎஃப்ஓ பகுப்பாய்வின்படி, 87 சதவீத உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளனர். இந்த சூழ்நிலையை மனதில் கொண்டு, குறைந்தபட்ச நிதி தேவை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மாண்டவியா மற்றொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார். அதாவது, உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் நிதியின் ஒரு பகுதியை ஓய்வூதியக் கணக்கிற்கு மாற்றும் விருப்பத்தையும் பெறுவார்கள் என்று கூறினார். தொழிலாளர் அமைச்சகத்தின் கூற்றுப்படி, சுமார் 30 கோடி ஈபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இந்தத் திருத்தத்தால் அதிகப் பயனடைவார்கள். தற்போது, EPFO ஆண்டுக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி கூட்டுத் திட்டத்தின் பலனையும் பெறுவதால், உறுப்பினர்கள் அதிக அளவு ஓய்வூதிய நிதியை குவிக்க முடியும்.
இதனால், புதிய மாற்றங்கள் உறுப்பினர்களுக்கு நிதியை எளிதாக அணுகுவதை மட்டுமல்லாமல், ஓய்வுக்குப் பிறகு நிதி பாதுகாப்பையும் உறுதி செய்யும். உறுப்பினர்களுக்கான வசதி, வெளிப்படைத்தன்மை மற்றும் நீண்டகால நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதற்கான ஒரு முக்கியமான படியாக இது இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
Read More : திடீரென முடங்கிய ஜியோ ஹாட்ஸ்டார்; ஸ்ட்ரீமிங் ஆகாததால் பயனர்கள் அதிருப்தி! நிறுவனம் விளக்கம்!