சுற்றுலாவுக்காக சக்லேஷ்பூர் சென்ற 23 வயது இளம்பெண், விடுதியில் சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் மரணம் நிகழ்ந்ததால், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷா, தனது உறவினர் மற்றும் நண்பர்களான ரகு, தர்ஷன் ஆகியோருடன் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி சக்லேஷ்பூருக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள விடுதி ஒன்றில் அவர்கள் தங்கியிருந்தனர்.
அன்று குளிப்பதற்காகச் செல்ல தயாரான வர்ஷா, முதலில் சாக்லெட் சாப்பிட்டுள்ளார். பின்னர் குளியலறையை நோக்கி நடந்து சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
இதையடுத்து அவரை உடனடியாக ஹெட்டூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து சக்லேஷ்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வர்ஷா உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் விசாரணையை தொடங்கினர். வர்ஷாவின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. அவருடன் பயணம் செய்த ரகு மற்றும் தர்ஷனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வர்ஷா சக்லேஷ்பூர் சென்றிருந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிந்திருந்தது. தற்போது அவரது திடீர் மரணத்துக்கான காரணத்தை கண்டறிவதில் போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். வர்ஷாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவில் அவரது மரணத்துக்கான காரணம் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்.
Also Read: 2 இளைஞர்களுடன் ஒரே அறையில் தங்கிய இளம்பெண்.. திடீரென நடந்த விபரீதம்!



