தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்கள் ஆக. 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். அதன் படி, நடப்பாண்டு (2025-26) 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் எமிஸ் தளம் வழியாக ஆக. 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அதிலிருந்து தகுதியானவர்களை தேர்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும். இதையடுத்து விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்டத் தேர்வுக்குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவர். அதன்பின் மாவட்ட தேர்வுக் குழுவினர் தகுதியான ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையிலான மாநில தேர்வு குழுவின் பரிசீலனைக்கு ஆக. 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.