இந்தியாவின் சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதும் வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த நிலையில், அந்த மரபை மாற்றி அமைத்து வரலாற்றுப் புரட்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்நாட்டையே சேரும்.
கடந்த 1974 ஆம் ஆண்டு வரை, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரண்டு நாட்களிலுமே மாநிலங்களில் ஆளுநர்களே கொடியேற்றி வந்தனர். டெல்லியில் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் என இருவருக்கும் தனித்தனியே கொடியேற்றும் உரிமை இருக்கும் போது, மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படும் மாநில முதலமைச்சர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது மாநில சுயாட்சிக்கு எதிரானது என அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி குரல் எழுப்பினார்.
ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே என்றும், பிரதமரைப் போல முதலமைச்சர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால் சுதந்திர தினத்தன்று அவர்களுக்கே கொடியேற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு அவர் தொடர்ந்து கடிதங்கள் வாயிலாகவும் நேரில் சென்றும் வாதாடினார்.
கருணாநிதி முன்வைத்த இந்த வலுவான வாதத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, சுதந்திர தினத்தன்று மாநில தலைநகரங்களில் முதலமைச்சர்களே தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற புதிய நடைமுறைக்கு ஒப்புதல் அளித்தது. இதன் பயனாக 1974 ஆகஸ்ட் 15 அன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு. கருணாநிதி முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி புதிய மரபை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் இந்த வரலாற்று முன்னெடுப்பால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமை கிடைத்தது.
மாநில உரிமை மீட்பின் அடையாளமாக அமைந்த அந்த மரபு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தின விழா அரசு நெறிமுறைகளின்படி மாநில தலைநகரங்களில் முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகள் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றி வருகின்றனர்.
Read More : “மானே.. தேனே.. பொன்மானே”..!! எதுக்கு இந்த இரட்டை வேடம்..? தவெக அரசை விளாசிய உதயநிதி..!!



