நிச்சயம் செய்த பெண்ணை நண்பருடன் பார்க்க சென்ற போது விபத்தில் சிக்கி இரண்டு பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மூலக்காடு அருகே உள்ள சானாரப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (27). இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தான் இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம் திருச்சி உறையூரில் நடைபெற்றது. அந்தப் பெண்ணை சந்திக்க நண்பர் தினேஷ்குமார் (28) உடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி பயணித்தார்.
திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் தொட்டியத்தை அடுத்த வரதராஜபுரம் பிரிவு சாலை அருகே அவர்கள் சென்றபோது, எதிரே வந்த வாகனம் இருசக்கர வாகனத்தை வேகமாக மோதியது. இந்த விபத்தில் மோகன்ராஜ் மற்றும் தினேஷ்குமார் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த தொட்டியம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிச்சயம் செய்த பெண்ணை பார்க்கச் சென்றபோது நேர்ந்த இந்த துயரமான விபத்து, சேலம் மற்றும் திருச்சி பகுதிகளில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: சின்ன வயசுலயே வெள்ளை முடி வந்துடுச்சா..? இதை செய்தால் முடி கருகருவென மாறும்..!