வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் மய்மன்சிங் (Mymensingh) பகுதியில் ஒரு இந்துத் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுப் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்தார். சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சனாதன தர்மத்தைச் சேர்ந்த இளைஞர் தீபு சந்திர தாஸ் (27) என்பவர் மய்மன்சிங் பகுதியில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
முகமது லிமோன் சர்கார் (19), முகமது தாரேக் ஹோசைன், முகமது மணிக் மியா (20), எர்ஷாத் அலி (39), நிஜும் உத்தீன் (20), அலோம்கிர் ஹோசைன் (38), முகமது மிராஜ் ஹோசைன் அகோன் (46) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.. இந்த சந்தேக நபர்கள் பல இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தீபு சந்திர தாஸ் மீது மத அவமதிப்பு செய்ததாக குற்றம் சாட்டி,கும்பல் தாக்குதல் நடத்தி கொலை செய்து, பின்னர் உடலை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. வங்கதேச இடைக்கால அரசு இந்த கொடூர சம்பவத்தை கடுமையாக கண்டித்து, “இந்த அருவருப்பான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டனை இல்லாமல் தப்ப முடியாது” என்று உறுதி அளித்துள்ளது.
பிரியங்கா காந்தி கோரிக்கை
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வட்ரா, வங்கதேசத்தில் இந்து, கிறிஸ்தவ, புத்த மத சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இந்திய மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ வங்கதேசத்தில் தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் ஒரு கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. மதம், ஜாதி, அடையாளம் போன்ற காரணங்களின் அடிப்படையில் நடைபெறும் போதும், வன்முறை மற்றும் கொலைகள் எந்த நாகரிக சமூகத்திலும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “வங்கதேசத்தில் இந்து, கிறிஸ்தவ மற்றும் புத்த மத சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை இந்திய அரசு கவனத்தில் எடுத்து, அவர்களின் பாதுகாப்பு குறித்து பங்களாதேஷ் அரசிடம் உறுதியாக கேள்வி எழுப்ப வேண்டும்,” என்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.
இதனிடையே, அசாம் மாநில அரசின் பேச்சாளர் பியூஷ் ஹசாரிகா இந்த தாக்குதலை “மிருகத்தனமான செயல்” என்று கடுமையாக கண்டித்தார். அதேபோல், பங்களாதேஷ் இந்து–புத்த–கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சிலும் இந்த கொலைச் சம்பவத்தை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த பெரிய மாணவர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாணவர் தலைவர் ஷரீஃப் ஒஸ்மான் ஹாடி உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அந்த மாணவர் எழுச்சியே முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பதவி நீக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் நடந்த தாக்குதலில் ஓஸ்மான் ஹாடி துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி படுகாயமடைந்தார். சிங்கப்பூரில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணத்துக்குப் பிறகு, “நீதி வேண்டும்” என்ற கோரிக்கையுடன் டாக்கா உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்த கலவரங்களின் போது, வங்கதேசத்தின் முக்கிய செய்தித்தாள்களான தி டெய்லி ஸ்டார் மற்றும் ப்ரோதோம் அலோ ஆகியவற்றின் அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இதையடுத்து, இடைக்கால அரசு வெளியிட்ட அறிக்கையில், மிரட்டல், தீவைத்தல், பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களுக்கு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டது. இவ்வாறான வன்முறைச் செயல்கள், சில குழுக்கள் மூலம் நடத்தப்படுவதாகவும், இவை நாட்டின் அமைதியை மிகவும் முக்கியமான தருணத்தில் பாதிக்கக்கூடும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.



