தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பினர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி – சி.வி சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இபிஎஸ் அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர்.. எனினும் சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் உடன் இணையவில்லை.. அவருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது..
இதனிடையே மதுராந்தகம், பெருந்துரை, தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.. சி.வி. சண்முகமும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது..
அதிமுகவில் இருந்து மேலும் பலர் வெளியேறலாம் என்று கூறப்பட்டது.. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார்.. தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்..
2016-2021 காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராக பணியாற்றியவர் வெல்லமண்டி நடராஜன். கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வரும் அவர், திருச்சி மாநகர மாவட்ட அவை தலைவராகவும் இருந்துள்ளார்.. 2022-ல் நிலவிய உட்கட்சி மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்றதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.. தொடர்ந்து ஓபிஎஸ் அணியில் வெல்லமண்டி நடராஜன் இருந்து வந்தார்.
ஆனால் அரசியலில் தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் திமுகவில் இணைவதற்கு முன்னரே, அவரின் ஆதரவாளர்கள் பலரும் திமுக, தவெகவில் இணைந்த நிலையில் சிலர் அதிமுகவில் மீண்டும் இணைந்துவிட்டனர்.. அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் கடந்த மார்ச் மாதம் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. அப்போது அவருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..



