I.N.D.I.A கூட்டணி கட்சிகள் கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு, ஊழல் மட்டுமே என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமருக்குக் கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்துவிட்டது என்று பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தத்துக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஆச்சரியமில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சரை இலாகா அல்லாத அமைச்சராக தக்கவைத்துக் கொண்டதைவிட மோசமான ஒன்று எதுவுமில்லை. சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் வைத்திருந்த அதே துறையில் அவரை பணியமர்த்தியது உங்கள் அரசு. இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்குப் பிறகே, அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்தியா கூட்டணியின் மற்றொரு ஊழல் வழக்கில் சிக்கிய அரவிந்த் கேஜரிவால், சிறையிலேயே பல மாதங்களாக முதல்வர் பதவி வகித்தார். 130ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஆச்சரியமில்லை.
உங்கள் கூட்டணியினர் கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு, ஊழல் மட்டுமே என்று கூறியுள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர்கள், அமைச்சர்கள் அல்லது பிரதமரோ 30 நாள்களுக்கு காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்மொழிந்தார். ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன என தெரிவித்துள்ளார்.