தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை “அரசியல் களமாக மாற்ற முடியாது” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) விவகாரத்தில் முறைகேடுகள் இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் உச்சநீதிமன்றத்திற்குப் பேரணியாகச் சென்று தலைமை நீதிபதியைச் சந்திக்க நேரம் கோரியிருந்தனர். எனினும், “வாட் சோரி” (Vote Chori) தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் (Sub-judice) இருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்திப்புக்குத் தலைமை நீதிபதி அனுமதி மறுத்துவிட்டார்.
இந்தச் சூழலில், வழக்கறிஞர்கள் கைது செய்யப்படுவது, இணைய சேவைகள் முடக்கம், மெட்ரோ ரயில் சேதங்கள் மற்றும் போராட்டங்களின் போது வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், “அனைத்து ஜனநாயக நடவடிக்கைகளும் அனுமதிக்கப்பட வேண்டும், ஆனால் உச்சநீதிமன்றத்தின் இயல்புள்ள செயல்பாடு எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் நடமாட்டத்திற்கு எந்தவிதத் தடையும் இருக்கக்கூடாது. போராட்டங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற அனுமதிக்க முடியாது” என்று வலியுறுத்தினார். மேலும், இது தொடர்பான மனுக்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



