அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகக் கூறி, அமைதிக்கான நோபல் பரிசு கோரிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். எனினும், அந்தப் புகழ்பெற்ற விருது தனக்கு கிடைக்குமா என்பதில் அவருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
புதன்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், 2026ஆம் ஆண்டுக்கான விருது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு அவர்கள் ஒருவேளை விருதை வழங்காமல் இருக்கலாம் என்ற பெயர் அவர்களுக்கு உண்டு” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இது அதற்கான நேரம்தான்… கடந்த முறை அந்த விருதைப் பெற்றவர் அதை மறைமுகமாக எனக்கு வழங்கியபோது நான் மிகவும் பெருமைப்பட்டேன். வரலாற்றில் வேறு யாருக்கும் இதைப் பெற தகுதி இல்லை என்று அவர் கூறினார்” என டிரம்ப் குறிப்பிட்டார்.
மச்சாடோவுக்கு 2026 நோபல் பரிசு:
2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர் அந்த விருதை இந்த ஆண்டு ஜனவரியில் டிரம்ப்பிடம் வழங்கினார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், “இது பரஸ்பர மரியாதையின் ஒரு அற்புதமான சைகை” என்றும், அவரும் “ஒரு அற்புதமான பெண்” என்றும் பாராட்டியிருந்தார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தான் பல போர்களைத் தீர்த்து வைத்துள்ளதாகவும், நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தான் எடுத்த நடவடிக்கைகளால் ஈரான் அணு ஆயுதம் பெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறி, அமைதிக்கான நோபல் பரிசு கோரிக்கையை அவர் மீண்டும் வலுப்படுத்தியுள்ளார்.
ஒபாமா மீது விமர்சனம்:
தொடர்ந்து பேசிய டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை விமர்சித்தார். ஒபாமா தனது பதவியேற்ற முதல் ஆண்டிலேயே அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார். பன்னாட்டு ராஜதந்திரத்தையும் மக்கள் இடையேயான ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான அவரது அசாதாரண முயற்சிகளைப் பாராட்டி ஒபாமாவுக்கு 2009ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டிரம்ப் பேசுகையில், “பாருங்கள், ஒபாமா அதைப் பெற்றார், ஆனால் அவர் எதையுமே செய்யவில்லை – எதற்காக அதைப் பெற்றார் என்பது அவருக்கே இன்னும் தெரியாது… அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், சரியாகத் தொடக்கத்தில்தானே அதைப் பெற்றார்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைச் போன்றவர்களுக்கு அதை வழங்காமல் இருப்பதற்கான நற்பெயர் அவர்களுக்கு உண்டு. ஆனால் எனக்கு அது கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, நான் அதைவிடக் கூடுதலான பல காரியங்களைச் செய்துள்ளேன். எனக்கு வழங்காவிட்டால் அது அவர்களுக்குத்தான் மிகப்பெரிய அவப்பெயரைத் தரும் என்று நான் நினைக்கிறேன்” என டிரம்ப் தெரிவித்தார்.



