சமையலறையை சுத்தமாக வைத்திருக்க பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்சை தினமும் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அதே ஸ்பாஞ்சை நீண்ட நாட்கள் மாற்றாமல் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்பாஞ்ச் எப்போதும் ஈரப்பதமாக இருப்பதால், அதில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் மிக வேகமாக பெருகும் வாய்ப்பு உள்ளது. பாத்திரங்களில் இருக்கும் உணவுத் துகள்கள் ஸ்பாஞ்சில் ஒட்டிக்கொள்வதால், கிருமிகள் வளர ஏற்ற சூழல் உருவாகிறது. இதனால், சுத்தம் செய்கிறோம் என்று நினைக்கும் பாத்திரங்களிலேயே மீண்டும் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்படலாம்.
குறிப்பாக, ஸ்பாஞ்சில் துர்நாற்றம் வீசத் தொடங்கினாலோ, அதன் நிறம் மாறியிருந்தாலோ அல்லது எளிதில் கிழியும் நிலைக்கு வந்திருந்தாலோ உடனடியாக மாற்ற வேண்டும். அதை தொடர்ந்து பயன்படுத்துவது உணவின் மூலம் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். மேலும், பயன்படுத்திய பிறகு ஸ்பாஞ்சை நன்றாகக் கழுவி, தண்ணீரை முழுமையாக பிழிந்து காற்றோட்டம் உள்ள இடத்தில் உலர வைப்பது அவசியம். எப்போதும் ஈரமாக இருக்கும் ஸ்பாஞ்சில் கிருமிகள் அதிகமாக வளரக்கூடும் என்பதால், அதை சிங்க் அல்லது மூடிய பாத்திரத்தில் போட்டு வைக்கக் கூடாது.
சுகாதார நிபுணர்களின் ஆலோசனைப்படி, பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்சை 2 முதல் 4 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. வீட்டில் சிறிய குழந்தைகள், முதியவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இருந்தால், இன்னும் அடிக்கடி மாற்றுவது பாதுகாப்பானதாக இருக்கும். சிறியதாகத் தோன்றும் இந்தப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம், சமையலறை சுகாதாரத்தை மேம்படுத்துவதோடு, குடும்பத்தினரை தேவையற்ற தொற்றுநோய்களில் இருந்தும் பாதுகாக்க முடியும்.



