உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால், அன்றாட உணவில் கீரைகளை சேர்ப்பது மிகவும் நல்ல பழக்கம். அந்த வகையில், குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் முருங்கைக்கீரை ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு சிறந்த உணவாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல முக்கிய சத்துகள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, தினமும் சில முருங்கை இலைகளை மென்று சாப்பிடும் பழக்கம் இருந்தால், பல்வேறு உடல்நல நன்மைகளைப் பெறலாம்.
முருங்கை இலைகளில் உள்ள சத்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன. இதனால் உடலை தாக்கும் தொற்றுகளை எதிர்த்து போராடும் திறன் அதிகரிக்கலாம். செரிமானக் கோளாறு, வயிற்று உப்புசம் அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கும் முருங்கை இலை உதவியாக இருக்கும். இது செரிமானம் சீராக நடைபெற உதவுவதோடு, குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்திற்கும் முருங்கை இலை நல்லது. இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதால், இதயத்தின் செயல்பாடும் சீராக இருக்க உதவும். அடிக்கடி உடல் சோர்வாக இருப்பவர்கள் முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உடலுக்கு புத்துணர்ச்சியையும், தேவையான ஆற்றலையும் வழங்க உதவுகின்றன.
சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் முருங்கை இலை நல்ல தேர்வாகும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகின்றன. அதேபோல், தலைமுடி வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வைக் குறைக்கவும் உதவலாம். எவ்வளவு நல்லது என்றாலும், முருங்கை இலைகளை அளவோடு மட்டுமே சாப்பிட வேண்டும். ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது ஏதேனும் மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பவர்கள், தொடர்ந்து அதிக அளவில் சாப்பிடும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
Also Read: சும்மா அழகுக்காக இல்லை… திருமணமான பெண்கள் வகிட்டில் குங்குமம் வைப்பதற்கு இது தான் காரணம்!



