கரூர் மாவட்டம் நரசிம்மபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அருணன் ஆகியோரின் தாயார் தேவகி என்பவர் கடந்த 3ஆம் தேதி காலமானார். அவரது அஸ்தியைக் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக இருவரும் தங்கள் உறவினர்களுடன் கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அஸ்தியைக் கரைத்த பின்னர், அனைவரும் ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர்.
அப்போது, அவர்களுடன் வந்த உறவினரான சீனிவாசன் (64) என்பவர் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று, எதிர்பாராதவிதமாக புதைமணலில் சிக்கிக் கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, அவரை காப்பாற்ற சுரேஷ் (63) மற்றும் அருணன் (62) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்களும் அந்தப் பகுதியில் இருந்த அபாயகரமான புதைமணலில் சிக்கிக்கொண்டனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக மூவரையும் மீட்டுச் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக நடைபெற்ற மணல் அள்ளும் பணிகளால் ஆறு முழுவதும் பல இடங்களில் ஆபத்தான பள்ளங்களும் புதைமணலும் உருவாகியுள்ளதாகவும், இது தெரியாமல் குளிக்கச் செல்பவர்கள் இதுபோன்று தொடர்ந்து உயிரை இழக்கும் அபாயம் ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்”..!! உதயநிதி கைதுக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்..!!



