தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகப் பெய்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும், வேளாண் சாகுபடி மற்றும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலத்தின் தற்போதைய மழைப்பொழிவு, குடிநீர் இருப்பு மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலவரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாநிலத்தில் 20 மாவட்டங்களில் இயல்பை விட 19 முதல் 59 சதவீதம் வரையிலும், செங்கல்பட்டு மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்யப் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பெருக்க ஆழ்துளைக் கிணறுகளைத் தூர்வாருதல், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், பழுதடைந்த மின்சாரக் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேவைப்படும் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்காக, குடிநீர் விநியோகம் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்த ரூ.330 கோடியும், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகளின் தேவைகளுக்காக ரூ.10 கோடியும் என மொத்தம் ரூ.340 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
இப்பணிகளை சீராக கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடனடியாகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பணிகள் குறித்து தனியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Read More : Gift உடன் கியூட்டாக வந்த மோப்ப நாய் ராக்கி..!! சாகசங்களை கண்டு ரசித்த முதல்வர் விஜய்..!!



