ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில், ஒரு பெண் உயிரியல் ரீதியாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்து மருத்துவ உலகிலும் சட்ட ரீதியாகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே ஐந்து குழந்தைகளுக்கு தாயான 27 வயதுடைய அப்பெண், குழந்தை இல்லாத வேறொரு தம்பதியினருக்கு உதவுவதற்காக எந்தவொரு பிரதிபலனும் இன்றி ‘வாடகைத் தாயாக’ மாற ஒப்புக்கொண்டார். இதற்காக கருத்தரிப்பு மையத்தின் மூலம் அந்த தம்பதியின் கரு அவரது கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது. அதே காலகட்டத்தில், அவர் தனது கணவர் மூலமாகவும் எதிர்பாராத விதமாக இயற்கையாக கர்ப்பம் தரித்துள்ளார். ஸ்கேன் பரிசோதனையில் அவர் இரட்டைக் குழந்தைகளை சுமப்பது தெரியவந்தது.
கடந்த நவம்பர் மாதம் அப்பெண் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். டி.என்.ஏ பரிசோதனைகளின்படி, பிறந்த ஆண் குழந்தை தாய்க்கும் அவரது கணவருக்கும் பிறந்த உயிரியல் என்பதும், பெண் குழந்தை வாடகைத் தாயை நாடிய மற்றொரு தம்பதியின் மரபணு ரீதியான குழந்தை என்பதும் உறுதியானது.
குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், இரு தம்பதியினரும் தங்களது சொந்த உயிரியல் குழந்தைகளை தனித்தனியாக வளர்த்து வருகின்றனர். இதில் அவர்களுக்குள் எந்தவொரு முரண்பாடும் இல்லை. இருப்பினும், குயின்ஸ்லாந்து மாநில வாடகைத் தாய் சட்டத்தின்படி, இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த “உடன் பிறந்தவர்களை” பிரிக்கக் கூடாது என்ற விதி இருப்பதால், இந்தச் சிக்கலான வழக்கில் கோல்ட் கோஸ்ட் குழந்தைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பு கோரப்பட்டது.
இந்த பிரத்யேகமான வழக்கை விசாரித்த நீதிபதி ஜோடி வூல்ட்ரிட்ஜ், இந்தக் குழந்தைகள் இருவரும் தனித்தனி முறையில் கருத்தரித்ததால் சட்ட வரம்பிற்குள் இவர்கள் “உடன் பிறந்தவர்கள்” என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள் என்று தீர்ப்பளித்தார். இதன் மூலம், அந்தந்த உயிரியல் பெற்றோருக்கான குழந்தை வளர்ப்பு உரிமை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.
முன்னதாக, பிறப்பிலேயே இந்த இரட்டைக் குழந்தைகளை பிரிப்பது அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து இரு தம்பதியினரும் சுயாதீன மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்றனர். “சிறந்த குடும்ப சூழலில் வளர்க்கப்படும்போது, குழந்தைகளைப் பிரிப்பது மட்டும் அவர்களுக்கு எந்தவொரு உளவியல் பாதிப்பையும் ஏற்படுத்தாது” என ஆலோசகர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார். மேலும், இரு குடும்பங்களும் ஏற்கனவே நல்ல தொடர்பில் இருப்பதாகவும், குழந்தைகள் வளரும்போது தங்களுக்கு இடையேயான உறவை அறிந்துகொள்ளும் வகையில் அவர்களை வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவான நண்பர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த இரு தம்பதியினரும் அறிமுகமாகி, செப்டம்பர் 2024-ல் வாடகைத் தாய் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். வாடகைத் தாயை நாடிய தம்பதியின் மனைவிக்கு பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாததால் அவர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஏப்ரல் 2025-ல் கரு செலுத்தப்பட்டு, அதன் பிறகு நடந்த பரிசோதனையில்தான் வாடகைத் தாய் இரட்டைக் குழந்தைகளைச் சுமப்பது தெரியவந்துள்ளது. வாடகைத் தாயும் அவரது கணவரும் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இல்லை என்றாலும், பிறந்த ஆண் குழந்தையைத் தாங்கள் அன்புடன் ஏற்றுக்கொண்டு வளர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்த வாடகைத் தாய் மற்றும் குடும்பநல வழக்கறிஞர் ஸ்டீபன் பேஜ், “பொதுவாக வாடகைத் தாய் மூலம் கருப்பையில் கரு செலுத்தப்படும் காலக்கட்டத்தில், அப்பெண் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவது வழக்கம். இந்தக் குழந்தைகள் தனித்தனியாகக் கருவுற்றதால், அவர்கள் சட்டப்படி ஒரே பிரசவத்தில் பிறந்த உடன்பிறப்புகள் அல்ல என்ற நீதிபதியின் முடிவு சட்டப்படியும், நடைமுறைப்படியும் முற்றிலும் சரியானது” என்று தெரிவித்தார்.



