தவெகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை 118 ஆக இருப்பதால், தவெக 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் தவெக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கட்சிகளும் நேர்மறையான சிக்னல்களை வெளிப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 5 இடங்கள் பெற்றுள்ள காங்கிரசுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களுடன் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில், தவெகவின் சட்டமன்றக் குழு தலைவராக நடிகர் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் சட்டமன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது மற்றும் அரசியல் முடிவுகளை வழிநடத்துவது உள்ளிட்ட பொறுப்புகள் இனி அவரிடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு தவெக அரசியல் நகர்வில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
Read more: முதல்வர் ஸ்டாலினின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றார்..! காபந்து முதல்வராக தொடர்வார்..!



