பல கோயில்களை ஒரே பயணத்தில் தரிசிக்க வேண்டும் என்ற பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய ஆன்மிக சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் டெல்டா பகுதியில் உள்ள 14 முக்கிய வைணவ திவ்ய தேசங்களுக்கு ஒரே நாளில் சென்று வர முடியும்.
வார இறுதி நாட்களில் மட்டும் இயக்கப்படும் இந்தப் பயணத்துக்காக 53 இருக்கைகள் கொண்ட ஏசி சொகுசுப் பேருந்து பயன்படுத்தப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கும்பகோணத்தில் இருந்து புறப்படும் பேருந்து, திட்டமிடப்பட்டுள்ள அனைத்து கோயில்களையும் சுற்றிய பின்னர் அதே நாளில் மீண்டும் கும்பகோணம் திரும்பும்.
பயணத்துக்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.1,350. அதிகாலை 5 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 8 மணியளவில் பயணம் நிறைவடையும் வகையில் நேர அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா வழித்தடத்தில் சீர்காழி, நாச்சியார்கோவில், மயிலாடுதுறை, திருநகரி, திருநாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு வைணவத் திருத்தலங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஸ்ரீ தடாளன் பெருமாள், ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், ஸ்ரீ பரிமள ரங்கநாத பெருமாள், ஸ்ரீ கல்யாண ரங்கநாத பெருமாள், ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய உள்ளனர்.
அண்ணன்பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், குடமாடு கூத்தர் கோயில், நாராயண பெருமாள் கோயில் ஆகியவையும் பயணத்தின் முக்கிய பகுதிகளாக உள்ளன. இதுதவிர ஸ்ரீ வைகுந்தநாதர், ஸ்ரீ வண்புருடோத்தமர், ஸ்ரீ செம்பொன்செய் பெருமாள் மற்றும் கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோயில்களுக்கும் இந்தப் பேருந்து செல்கிறது.
தனியார் வாகனம் இல்லாமல் ஒரே நாளில் பல திவ்ய தேசங்களை தரிசிக்க விரும்புவோருக்கு இந்தத் திட்டம் வசதியான பயண வாய்ப்பை வழங்குகிறது. பேருந்தில் செல்ல விரும்பும் பக்தர்கள் முன்கூட்டியே பயணச்சீட்டை பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளலாம்.
Also Read: அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேரமா?.. தவெகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!



