தமிழக அரசியல் சூழலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் தருணத்தில் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. 17வது சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 3,324 மேஜைகள் மற்றும் 10,545 பணியாளர்கள் மூலம் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், நடிகர் விஜயின் ஆஸ்தான ஜோதிடராக கூறப்படும் ராதன் பண்டிட் வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தபால் வாக்குகள் விரைவாக முடிந்ததும், 8.30 மணிக்குள் இயந்திர வாக்குகள் எண்ணப்படும். இதையடுத்து 9.15 மணிக்கே தமிழகத்தில் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் முதல்வராகும் செய்தி வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மே 4ஆம் தேதி விஜய்க்கு அதிர்ஷ்டமான நாள் என்றும், கிரக நிலைகள் அனைத்தும் சாதகமாக உள்ளதாகவும், “Extraordinary Lucky Time” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு இது நல்ல நாள் அல்ல என்றும், உதயநிதிக்கு சந்திராஷ்டமம் என்றும் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் இன்று சாதகமான நாள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த ஜோதிடக் கணிப்புகள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன. உதயநிதியின் ராசி குறித்து தவறான தகவல் கூறப்பட்டுள்ளதாகவும், இன்று சந்திராஷ்டமம் மேஷ ராசிக்கே பொருந்தும் எனவும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அடிப்படை ஜோதிட அறிவே இல்லாமல் இவ்வாறு கருத்து கூறுவது தவறு என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக, தவெக 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, விஜய் முதல்வராகுவார் என ராதன் பண்டிட் கணித்திருந்தார். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கே முன்னிலை எனக் கூறுகின்றன. சில ஏஜென்சிகள் மட்டுமே தவெக 98 முதல் 120 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளன. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 118 இடங்கள் தேவைப்படும்.
Read more: இன்று வாக்கு எண்ணிக்கை.. தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் குவிப்பு.. பலத்த பாதுகாப்பு..!



