சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சிலவற்றை தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும், பல நேரங்களில் பெற்றோரின் கவனக்குறைவினாலேயே குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறலாம். அந்த வகையில், தற்போது டெல்லியில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பெற்றோர் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் வழங்குகிறது
டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று , டெல்லியின் கல்காஜி பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் பத்தாவது தளத்தில் மிதுன் தாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். மீன் வியாபாரம் செய்து வரும் இவருக்கு, ஐந்து வயதான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு அனைவரும் உறங்கச் சென்றுள்ளனர்.
இவரது 5 வயது மகள் தூங்கிய பிறகு, இரவு பத்து முப்பது மணியளவில் அவரது குடும்பத்தினர் வெளியில் உள்ள மற்றொரு அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை, தனது பெற்றோர் அருகில் இல்லாததால் பால்கனி பகுதிக்குச் சென்று கீழே எட்டிப்பார்த்துள்ளார். அபோது, எதிர்பாராத விதமாக ஐந்து வயதுக் குழந்தை பத்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பால்கனியில் பாதுகாப்பு இரும்பு வேலிகள் இல்லாததால் தான் இந்த விபத்து நடக்க காரணம் எனப் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: “குண்டாக இருந்ததால் கொலை செய்தோம்” கணவன் வீட்டில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!


