சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த பெண், மூன்றாவது மாடி பால்கனியில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தபோது தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் 34 வயதான லட்சுமி. இவர் வழக்கம் போல், இன்று காலை தனது வீட்டின் மூன்றாவது மாடி பால்கனியில் துணிகளை உலர்த்தச் சென்றுள்ளார். அப்போது, அவர் பால்கனியின் தடுப்புச் சுவரில் சாய்ந்தபடி துணிகளை உலர்தியுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவர் திடீரென இடிந்து சரிந்துள்ளது.
இதில் நிலைதடுமாறிய லட்சுமி, சுவருடன் சேர்த்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. லட்சுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதி பொதுமக்கள் குடியிருப்பின் சுவர்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.



