நாங்க யாருடன் வேணும்னாலும் கூட்டணி வைப்போம் என்றும் ஸ்டாலின் ஏன் நடுங்குகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சிதம்பரத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடையே உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “அதிமுக என்பது இரு பெரும் தெய்வங்கள் உருவாக்கிய கட்சி.. எந்த கொம்பனும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.. நாங்கள் பாஜகவை பயப்படுவதாக கூறுகிறீர்கள்.. பணத்தை காப்பாற்றிக் கொள்ள பாஜகவை பார்த்து ஸ்டாலினுக்கு தான் பயம்.. கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக.. உங்களை போல இரட்டை வேடம் போடும் கட்சி அல்ல..
ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கருப்பு பலூன் விட்ட மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மோடிக்கு வெள்ளை குடைப்பிடித்தார். வெள்ளைக்கொடி பிடித்த வேந்தன் என்று ஸ்டாலினுக்கு பட்டம் கொடுக்கலாம்..
எடப்பாடி பழனிசாமி அமித்ஷா வீட்டிற்கு கள்ளத்தனமாக செல்கிறார் என உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.. அவர் என்ன பாகிஸ்தானுக்கு உள்துறை அமைச்சரா? இந்தியாவின் உள்துறை அமைச்சரை சந்திப்பதில் என்ன தவறு..
திமுகவின் நாடகத்தை பார்த்து மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. 2026 தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டிய தேர்தலாக இருக்க வேண்டும்.. நாம் பாஜக உடன் கூட்டணி சேர்ந்துவிட்டதால் ஸ்டாலினுக்கு பயம்.. ஆட்சி பறிபோய்விடும் என்ற அச்சம் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது.. பாஜக உடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டு.. ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று சட்டப்பேரவையில் ஸ்டாலின் என்னிடம் கேட்டார்.. எங்கள் கட்சி நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.. ஏன் நடுங்குகிறீர்கள்..? அப்படி என்றால் அதிமுகவை பார்த்து பயம் வந்துவிட்டது.. இல்லை எனில் சட்டமன்றத்தில் இந்த கேள்வியை கேட்பாரா? 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமையும்.. தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமையும்..
மத்தியில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் வழங்கவில்லை.. நிதி வழங்கவில்லை என்று ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.. திமுக 16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இடம்பெற்றிருந்தது.. அப்போது தமிழ்நாட்டை பற்றி ஞாபகம் இல்லை.. தமிழ்நாட்டு மக்களை பற்றி அக்கறை இல்லை.. ஓட்டுப்போட்ட மக்களை மறந்தவர் ஸ்டாலின்.. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு பாஜகவை பேசு பொருளாக்கி வருகிறார்கள்.. இது என்ன நியாயம்?” என்று கடுமையாக விமர்சித்தார்.